Tuesday, September 29, 2009

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?


Courtesy: The Malaysian Insider

அவர்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள். வெட்டப் பட்ட பசுமாட்டின் தலையைக் கோயில் வாசலில் எறிந்து தங்கள் மிரட்டலின் தீவிரத்தை வெளிப்படுத்தினார்கள் - “இந்தப் பகுதியில் கோயிலேயே இருக்கக் கூடாது” என்ற மிரட்டல். ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் ஜும்மா நமாஸ் முடிந்தவுடன் மதவெறி கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அவர்கள் தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்”. உடனடியாக அரசு கோயில் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு ஆணையிட்டது. கோயிலை எதிர்க்கக் காரணம்? ”மலேசியா இன்சைடர்” இதழில் செய்தியாளர் ஷாஜ்வான் முஸ்தபா கமால் எழுதுகிறார் - “செக்‌ஷன் 23 பகுதி வாசிகளான மலாய் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள், இந்தப் பகுதிகள் இந்துக் கோயில் அமைவதை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் இங்கு ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 90% மலாய் முஸ்லிம்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் இந்துக் கோயில் கட்டப் படுவது அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் செய்யப் படும் செயல் என்றும் கோயிலில் நடக்கும் விஷயங்கள் அவர்களது வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர். ’கோயிலில் இருந்து வரும் சத்தங்கள் எஙக்ள் தொழுகையைத் தொந்தரவு செய்யும், எங்களால் முழுமையான, ஒழுங்கான முஸ்லிம்களாக வாழ முடியாத நிலை ஏற்படும்’ என்றும் அவர்கள் முறையிட்டனர்.” “மலேஷியா ட்ரூலி ஏஷியா” (Malaysia-truly Asia) என்று தன்னைப் பற்றிப் பெருமை பீற்றிக் கொண்டு , பெரும்பான்மையினராக இந்துக்களைக் கொண்ட இந்திய சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்க விளம்பரம் செய்யும் நாட்டின் லட்சணம் இது !

Courtesy: The Malaysian Insider

இந்துப் பணம் வேண்டும், அதை வரவேற்போம், ஆனால் அவர்களது மதத்தை அவமதிப்போம்! - இதுதான் கல்வியறிவு பெற்ற, பணம் படைத்த, நவீன முகம் கொண்ட முஸ்லிம்-பெரும்பான்மை நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிற இந்த நாட்டின் “ட்ரூலி ஏஷியா” செய்தியின் சாராம்சம். ஆனால் மலேசிய அரசே திட்டமிட்டு இந்துக்களை நசுக்குகிற இந்த அப்பட்டமான அராஜகததை எதிர்த்து உலகின் மிகப் பெரிய இந்துப் பெரும்பான்மை தேசத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்ததோ? டென்மார்க் முகமது நபி கார்ட்டூன்களையும், கனடா இளைஞர்கள் செய்யும் மத அவதூறுகளையும் பற்றி இந்தியாவில் அங்கலாய்ப்பவர்கள் மலேசியாவிலும், மற்ற இடங்களிலும் இந்துக்கள் மீது தொடர்ந்து நடக்கும் அடக்குமுறைகள் விஷயத்தில் மொத்தமாக மௌன விரதம் பூண்டு விடுகிறார்கள்! இம்ரான் ஹஷ்மியின் பச்சைப் பொய்களை தார்மீக ஆர்வத்துடன் ஊதிப் பெருக்கும் ஊடகங்களுக்கு, வெட்டப் பட்ட பசுமாட்டுத் தலையைக் காட்டி இந்துக்கள் மிரட்டப் படும் உண்மைத் தகவல் ஒரு சின்ன செய்தி கூட அல்ல! கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர் என்று பிரைம்டைம் அல்லாத நேரத்தில் ஒரு சின்ன உரையாடல் நடத்தக் கூட அவைகளுக்குத் தோன்றுவதில்லை. அரசியல் சட்டத்தின் படி தன்னை இந்து நாடாக சமீபகாலம் வரை அறிவித்திருந்த ஒரு நாடு, தனது தேசத் தலைவரான மன்னரின் அரண்மனை முன்பு அந்த நாட்டின் மிகப் பெரிய மசூதியைக் கட்ட அனுமதி அளித்திருந்தது; மதமாற்றங்களையும் அனுமதித்திருந்தது. ஆயினும் மதச்சார்பின்மை பிரகடன கோலாகலங்களுடன் அதன் வீழ்ச்சி துல்லியமாகத் திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டது.. இப்போது நாம் பசுபதிநாதர் ஆலயத்தின் இந்து பூசாரிகள் வெறித்தனமாக அடித்துத் தாக்கப் படுவதையும் காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த அறுபதாண்டுகளாக, “இந்துக்களாக” இந்துக்களின் அரசியல் சக்தியும், பெருமிதமும் தொடர்ச்சியாக வீழ்ந்து வருகின்றது.

'இந்துக்களை ’அறுவடை செய்தல்’ அமோகமாக நடந்துவருகிறது என்று ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தான் அதைப் பற்றி அலசவேண்டியும் இருக்கிறது. ஒரு பறவைப் பார்வையாக, உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் - இது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், காபூல் முதல் ராவல்பிண்டி வரை, கராச்சி முதல் லாஹூர் வரை ஒவ்வொரு இடத்திலிருந்தும் இந்துக்கள் துரத்தப் பட்டிருக்கிறார்கள். முதலில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தீர்மானித்து, ஜின்னாவின் நேரடித் தாக்குதல் (direction action) படுகொலைகளால் பெரும் பீதியடைந்திருந்த காந்தி உள்ளிட்ட தலைவர்களால் ஒப்புக் கொள்ளப் பட்ட தேசப் பிரிவினையின் காரணமாக. பிரிவினைக்குப் பின்னும் இந்துக்கள் காஷ்மீரில் மிகக் குரூரமான இன ஒழிப்புக்கு ஆளானார்கள். ஐந்து லட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களின் புராதன பூமியையும், வீடுகளையும், கோயில்களையும், சோலைகளையும், ஏன் தங்கள் உலகமாயிருந்த வாழ்க்கை முழுவதையுமே விட்டு விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். புதிதாக உருவான பாகிஸ்தானில் வாழலாம் என்று தீர்மானித்த இந்துக்கள் தினந்தோறும் அவமதிப்பைச் சகிக்க வேண்டி, வேலைவாய்ப்புகளும் அரசியல் உரிமைகளும் முற்றிலுமாக மறுக்கப் பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறார்கள்.
Pakistani Hindu Bheel community show photos of girls who have been kidnapped and converted
அவர்களது பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், பலவந்தமாகத் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். அவர்களது கோயில்கள் இடிக்கப் படுகின்றன, பண்டிகைகள் தடை செய்யப் படுகின்றன, மயான பூமி கூட மறுக்கப் படுகிறது. இந்து அமெரிக்க ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் 2008ம் ஆண்டிற்கான இந்து மனித உரிமைகள் பற்றிய அறிக்கையின் முன்னுரை கூறுகிறது - “பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் கூட, வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலேயே கொலை, வன்புணர்வு, கோயில் இடிப்புகள் என்று 270 சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் பெருமளவில் இந்துக்களைக் கொத்தடிமைகளாகப் பிடித்தல், இந்துப் பெண்களைக் கடத்தி பலவந்தமாக இஸ்லாமுக்கு மதமாற்றுதல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்துக்களின் மீதான வன்முறை கலந்த அடக்குமுறைக்காக உலக அளவில் மலேசியா கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. முதல்முறையாக ரஷ்யாவும் இந்துக்களுக்கெதிரான செயல்பாடுகளுக்காக பட்டியலில் இடம் பெறுகிறது. 1947ல் பங்களாதேஷ் மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருந்த இந்துக்கள், இன்று 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளனர். 1991ல், 2 கோடி இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து “மறைந்து விட்டதாக” அந்த நாட்டின் சென்சஸ் சொல்லிற்று.” அவர்கள் இப்பேர்ப் பட்ட குரூரங்களுக்கு ஆட்படுத்தப் படுவதற்கு ஒரே காரணம் அவர்கள் இந்துக்களாக இருப்பது. அவர்களது இந்துத் தன்மை, அதாவது இந்துத்துவம் (Hinduness). அது தான், அது மட்டுமே தான் ஐயா. பன்முக வாழ்க்கையைக் கற்றுத் தரும் இந்துத்துவம். ஜனநாயகத்தை சாத்தியமாக்கி, நிலைநிறுத்தும் இந்துத்துவம். கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் தனிமனித சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் தரும் இந்துத்துவம்! இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இலங்கை, சவுதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், ஃபிஜித் தீவுகள், மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் (டிரினிடாட் & டொபாகோ) ஆகிய நாடுகளில் இந்துக்கள் மீதான அத்துமீறல்கள் பற்றிய பல விவரங்களை அந்த அறிக்கை அளிக்கிறது. இதில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அடக்கம். இன அழிப்புகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், படுகொலைகள், கோயில் அழிப்புக்கள், அரசியல்-சமூக புறக்கணிப்புக்கள், வாக்குரிமை பறிப்புக்கள், பாரபட்சமான நடத்தை மற்றும் பலவந்தமான மதமாற்றங்கள் உள்ளிட்ட எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள இந்து சமூகங்கள் ஆட்படுத்தப் படுகின்றன. மிகச் சோகம் தரும் விஷயம். ஆனால் அதை விட சோகம் தரும் விஷயம் இந்துக்களின் காயங்களையும், வலிகளையும் காண்பிப்பதற்குக் கூட இடம் இல்லை என்பது தான். இந்து-அல்லாதவராக இருந்தால் தான் ஊடகங்களின் விசாரிப்பையும், கவனிப்பையும் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் மானுட சுதந்திரத்தையும், பன்முகத் தன்மையையும் காப்பாற்றி வரும் மத வரையறைகளைக் கடந்த பழம்பெரும் அறநெறி, தர்மவழி, உலகெங்கும் அரசு அதிகாரங்களும், வெறுப்பியல் பிரசாகரர்களும் தொடுக்கும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் மட்டுமல்ல; அதன் காயங்கள் கூட பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன; இதற்கு என்ன காரணம்? அதையும் புரிந்து கொள்ள வேண்டும். லட்சுமி நிவாசம் செய்யும் மிட்டல்களும், அம்பானிகளும் கோடிக்கணக்கில் செல்வம் கொழிக்கும் இந்துக்கள். ஆயினும் அவர்கள் இந்து நோக்கத்திற்கும், நலன்களுக்கும் உதவக் கூடும் என்ற எண்ணம் அவர்களே உட்பட யாருக்கும் தோன்றுவதில்லை. இங்கு ஒரு ஷாருக்கான் தனது மத உணர்வை நெஞ்சில் சுமக்க முடியும், ஈராக்கில் முஸ்லிம்கள் சாவது குறித்து தன் வேதனையை வெளிப்படுத்த முடியும், அது பாராட்டுக்குரிய விஷயமாகிறது! ஆனால் ஒரு சச்சினோ, அமிதாப் பச்சனோ வடகிழக்கு இந்தியாவிலோ அல்லது வேறெங்கோ இந்துக்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து ஆதங்கமும் வருத்தமும் தெரிவித்து கேட்டிருக்கிறீர்களா? அது இங்கே நிகழக் கூடுமா? எப்படி நிகழும்? தங்களது மதச்சார்பின்மைக்கு பங்கம் வரும் என்றல்லவா அவர்கள் முதலில் யோசிப்பார்கள்! ஆனால் அது எப்படி என்று தான் புரியவில்லை. மதச்சார்பின்பைக்கு எப்போது பங்கம் வரும்? ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினரைத் தூண்டிவிடும்போது. ஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழும் தர்மத்தை, அதை உயிராகக் கொண்டு அமைந்த விலைமதிப்பற்ற உங்களது சொந்த வாழ்க்கை நெறியை முன்நிறுத்துவதும், அதைப் பாதுகாப்பதும் பெருமைக்குரிய விஷயம் அல்லவா? அது எப்போது வெட்கப் படும் விஷயம் ஆனது? இந்து சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவர்களே இந்து வாழ்வுரிமையையும், நலன்களையும் கண்டுகொள்ளாமல் கைவிடுவது என்பது மிக மோசமான விஷயம். எந்த அளவுக்கு என்றால், இந்துக்களின் வலிகளையும், காயங்களையும் முன்னிறுத்தி அரசியல் ரீதியாக எடுத்துச் செல்லும் அமைப்புகளின், தலைவர்களின் மனநிலையையும் இது பாதிக்கிறது. இந்த “நவீன மதச்சார்பின்மை” தரும் அழுத்தங்கள் அவர்களது முடிவுகளிலும், நிலைப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. மேலும், பொதுத் தளத்தில் சில செயல்பாடுகள் காரணமாக, இந்த பிரசினைகளை மக்களிடம் எடுத்துச் சென்று பொதுஜன ஆதரவை முடுக்கித் திரட்டுவதற்கான தார்மீக உரிமையையும், நம்பகத் தனமையையும் கூட அந்த அரசியல் தலைமைகள் இழந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தெற்காசியா முழுவதும், மக்கள் தொகையிலும், அரசியல் அதிகாரத்திலும் இந்துக்கள் தொடர்ந்து தேய்ந்து வருவது பற்றிய கவலை யாருக்கும் இல்லை; அதைப் பற்றிப் பேசினால் உடனே செக்யுலரிச சாட்டையை எடுத்து விளாசுகிறார்கள். அரசியல் தலைவர்கள் இந்து உரிமைகளையும், நலன்களையும் வலியுறுத்தும் பொறுப்பை ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்களோ? ஒரு அரசியல் கட்சி இந்து அடையாளத்தை முன்னிறுத்துவது என்பது போலி மதச்சார்பின்மையில் ஊறிய சமூக சக்திகளும் மற்றும் அரசு அதிகாரமும் அதைத் தீண்டத் தகாததாகக் கருத அழைப்பிதழ் விடுப்பதாகும் என்ற ஒரு கருத்தாக்கத்தை இவர்களே உருவாக்கி உலாவ விடுகிறார்கள்! மலேசிய இந்துக்களின் இடர்ப்பாடுகள் இந்து அரசியல் அதிகார உரிமைகள் உலகெங்கும் அழிந்து வருவதற்கு ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. சோழ, பாண்டிய, ஸ்ரீவிஜய, விஜயநகர பேரரசுகளின் மகோன்னதத்திற்கும், சிவாஜியின் இந்து ராஜ்யத்திற்கும் பின்வரும் காலங்களில், மலேசியாவிலும், நேபாளத்திலும் இந்துக்கள் அடித்து நொறுக்கப் படுவதையும், அவர்களது புனித நூல்கள் ஜெட்டா விமான நிலையத்தில் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடப் படுவதையும் தான் நாம் காண வேண்டுமா? இப்போது, இந்து சமூகத்தின் அரசியல் சாராத சக்தி மையங்களும் திரண்டெழ வேண்டும். மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிக்கும் பழம்பெரும் தர்ம நெறியைக் கட்டிக் காப்பதற்காக, உண்மையான இந்து அரசியல் சக்திகள் மீண்டும் விழித்தெழ அவை உதவ வேண்டும். அதுவே இப்போது செய்யவேண்டிய பணியாகும்.