Showing posts with label காமே கௌடா. Show all posts
Showing posts with label காமே கௌடா. Show all posts

Sunday, June 28, 2020

பிரதமரின் மனதில் இடம் பிடித்தவர்:

காமே கௌடா.




84 வயது. இவர் ஒரு தபஸ்வி. ஆம் 42 வருடங்களாக தனது லட்சியத்திலிருந்து சிறிதளவு கூட விலகாமல், பிரதிபலன் எதையும் எதிர் பார்க்காமல் தொண்டாற்றி வருகிறார். அப்படியென்ன தொண்டாற்றியுள்ளார் காமே கௌடா.

தனது கிராமத்தின் அருகில் இருக்கும் மலைச் சரிவுகளில் இதுவரை 16 புதிய குளங்களை வெட்டி உருவாக்கியுள்ளார். ஆம் அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலையை தனியொரு மனிதனாக முன்னெடுத்து செய்து முடித்துள்ளார்.

காமே கௌடாவின் சொந்த ஊர் நமது தமிழக எல்லையைத் தொட்டுக்கொண்டி ருக்கும் மாண்டியா (கர்நாடக) மாவட்டத் தில் உள்ள தாசனதொட்டி கிராமம். சிறிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆடு மேய்ப்பதும் அதிலொன்று. இவரது கிராமத்திற்கு அருகில் உள்ளது குண்டினிபெட்டா மலை. அங்கு தனது ஆடுகளை மேய்ப்பதற்காக ஒட்டிச் செல்வார். அது பொட்டல் காடாக இருந்தது. பசுமை என்பதே சிறிது கூடக் கிடையாது. கால்நடைகள், பறவைகள் குடிக்கத் தண்ணீர் இன்றித் தவிப்பதைப் பார்த்தார். மழை காலத்தில் பெய்கின்ற மழை நீரெல்லாம் மலைச்சாரலில் தேங்கி நின்றிட இடம் இல்லாததால் கீழே சென்று விடுவதை கவனித்தார். அப்போது அவரின் மனதில் தோன்றி யது தான் கால்நடைகள், பறவைகளின் தாகம் தணிக்க குளம் வெட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என்கிற சிந்தனை.

காமே கௌடா உடனடியாக திட்டத்தை நிறைவேற்றும் வேலையைத் துவக்கி னார். தன்னிடமிருந்த 2 ஆடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் குளம் வெட்டுவதற்குத் தேவையான கருவி களை வாங்கி தனியொரு மனிதனாக வேலையைத் துவக்கினார். தினசரி காலை 5 மணி முதல் 9 மணி வரை குளம் வெட்டும் பணி. பின்னர் 9 மணி முதல் மாலை 7 மணி வரை ஆடு மேய்த்தல். இதற்கிடையில் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வந்தார். முதல் குளத்தை வெட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகியது.

தனியொரு ஆளாக குளம் வெட்டத் துவங்கிய போது பலரும் இவரைப் பைத்தியக்காரன் என்றெல்லாம் கேலி செய்தனர். அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது குறிக்கோளை எட்டுவதில் முனைப்புடன் இருந்துள்ளார். தனது சொந்த செலவில் சிலரை வேலைக்கு அமர்த்தி குளம் வெட்டும் வேலையை துரிதப்படுத்தியுள்ளார். இதுவரை 16 குளங்களை அந்த மலை சரிவுகளில் வெட்டியுள்ளார். இதற்காக அரசிடமிருந்து எந்த நிதியையும் பெறவில்லை. இவரது உண்மையான தொண்டினைப் பார்த்தவர்கள் கொடுத்த நிதி உதவி, இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டபோது கிடைத்த சன்மானங் கள் போன்றவற்றைக் கொண்ட 16 குளங்களையும் வெட்டியுள்ளார். ஒவ்வொரு குளத்திற்கும் தனது பேரக் குழந்தைகளின் பெயரை சூட்டியுள்ளார்.

பொட்டல் காடாகக் கிடந்த குண்டினி பெட்டா மலைச்சாரல் இன்று வருடம் முழுவதும் பச்சைப் பசுமையாகக் காட்சி தருகிறது. மழை நீர் மேலிருந்து ஒவ்வொரு குளமாக நிரம்பி அணைத்துக் குளங்களும் மழை காலத்தில் நிரம்பி விடுகிறது. பறவைகள், கால்நடை களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து வருவதுடன் விவசாயத்திற் கும் தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.

மகத்தான பணியை செய்துள்ள காமே கௌடா சாதாரண தனது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் 4 குளங்களை வெட்ட வேண்டும் என்பது அவரது இலக்காகும். இந்த மாமனிதரைப் பற்றி இன்றைய மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி யில் பிரதமர் குறிப்பிட்டார்.

Sadagopan Narayanan
https://www.facebook.com/narayanan.sadagopan.75/posts/10217770504397605